Vaiko request to go to all trains including Vaigai, Tirupati and Antiyodaya in Manaparai

மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ இன்று விடுத்துள்ள அறிக்கை :

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களால் தொடங்கப் பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும் மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மணப்பாறை திருச்சியிலிருந்து 45 கி.மீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கி.மீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீக்கு இடையில் மணப்பாறை இரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

அகல இரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணப்பாறை இரயில் நிலைய ஸ்டாலில் விற்கப்பட்ட மணி ஐயர் தயாரித்து வழங்கிய மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி அவர்கள் மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, இரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று அண்ணல் காந்தியார் பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை இரயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல்வெட்டாக நிலைத்து நிற்கின்றது.

இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித இரயில்கள் நின்று செல்கின்றன.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி இரயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு திருச்சி ரயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய இரயில்வே அமைச்சர் மாண்புமிகு சுரேஷ் பிரபு அவர்களிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி இரயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசியதும், அன்றைய தினமே இண்டர்சிட்டி இரயில் மணப்பாறையில் நிற்கும் என்று இரயில்வே அமைச்சர் அறிவித்ததும்
நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, தற்போது பகல் நேரத்தில் சென்னை பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ள மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை துரித இரயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் இராமேஸ்வரம்-திருப்பதி துரித இரயில், அண்மையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட அந்த்யோதயா இரயில் உள்பட அனைத்து இரயில்களையும் மணப்பாறையில் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகின்றது.

மேலும், திருச்சிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கட்டடத் தொழிலாளர்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு மற்றுமொரு புதிய பயணிகள் இரயில் இயக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுதினம் (புதன்கிழமை) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ், நகரப் பொறுப்புக் குழுத் தலைவர் எம்.கே.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலையில் திருச்சி புறநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன் உள்ளிட்டோர் பங்கேற்கும் இரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.

ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய இரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!