Van crashes into tree near Perambalur; One dead, 6 injured!
திருச்செந்தூரில், சாமி கும்பிட்டு வீடு திரும்பியவர்களின் வேன் பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்த 11 பேர்கள் வேனில் சாமி கும்பிட திருச்செந்தூர் சென்றனர். பின்னர், நேற்றிரவு சொந்த ஊருக்கு திரும்பி அதே வேனில் வந்துக் கொண்டிருந்தனர். வேன், பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த கோபி மகன் சதீஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தார். பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங் அருகே சென்றுக் கொண்டிருந்த போது வேன் டிரைவருக்கு வெப்பம் மற்றும் அசதியின் காரணமாக தூக்கம் வந்துள்ளது. அதனால், வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் வந்த தேவராஜ் மனைவி சந்திரா (65 என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேன் டிரைவர் சதீசுக்கு வலது கை முறிவு ஏற்பட்டது. பயணித்த அருள் பிரகாசம் மனைவி கார்த்திகா (32), பாபு மனைவி சுகப்பிரியா (27), ஆகிய இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
சந்திரமோகன் மனைவி குணசீலா (62) இடது கை, மார்பில் காயமும், அருள் பிரகாசத்தின் மகள் பிபிஷா (6), உள்காயமும், பாபு மகன் விஷ்ணுராஜ் (8)
வலது கை முறிவும் ஏற்பட்டது.
இவர்களின் கூக்குரலை கேட்ட, வழிபோக்கர்கள் கொடுத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அரும்பாவூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, முதலுதவி செய்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய ஓய்வு எடுக்காத ஓட்டுனரால் விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெயில் காலம் என்பதால் உரிய ஓய்வு எடுத்து போதுமான கால அவகாசத்தில் செல்ல பயணங்களை திட்டமிட்டு, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.