வசிஷ்டபுரம் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வீரப்பிள்ளைகுடிக்காடு என்கிற வசிஷ்டபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர், அருள்மிகு மகா மாரியம்மன், அருள்மிகு கருப்பையா கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் கோலமாக நடந்தது. .
முன்னதாக காலை 6.00 மணிக்கு 3ம் கால யாகபூஜை ஐபம், ஹோமங்கள், நாடிசந்தானம், ஸ்பரிசாஹதி நடைபெற்றன. பின்னர் காலை 9,15 மணியளவில் பூர்ணாஹூதி முடிந்தவுடன் பரிகார யாகசாலை கடங்கள் வெடி மற்றும் மேளதாளங்களுடன் கோயிலை ஊர்வலமாக வந்து தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்த விநாயகர், மகா மாரியம்மன், கருப்பையா உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்களுக்கு கலசங்களுடன் சென்றனர்.
பின்னர் காலை 9.30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. குழுமியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோபுரத்தை வணங்கினர். கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. உடன் விநாயகர், மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மங்களமேடு டிஎஸ்பி ஜவகர்லால், குன்னம் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்கள் வசதிக்காக பலஇடங்களில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 நபர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பல இடங்களில் தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை வதிஷ்டபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இரவு வெடி, மேளதாளங்களுடன் மகா மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.