VCK General Secretary Ravikumar threatens life; Provide appropriate protection! Vaiko Report
மதிமுக பொதுச் செயலாளார் வைகோ விடுத்துள்ள அறிக்கை :
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ், பெங்களூருவில் இந்துமத அடிப்படைவாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு, கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பை கைப்பற்றி இருக்கிறது.
கௌரி லங்கேஷ் கொலையை திட்டமிட்டு செய்த அமோல் காலே என்ற கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பில் கௌரி லங்கேஷ் போன்று 34 பேரை கொல்வதற்கு பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தில் 8 பேரும், இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் 24 பேரும் கொலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் மத்திய புலனாய்வுத் துறை தமிழக அரசுக்கு வழங்கி உள்ள அறிவுறுத்தலில், எழுத்தாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை செய்துள்ளது.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்துத்துவ மதவெறி சக்திகள், கொலைவெறி கொண்டு அலைவதை நாடு முழுவதும் காண முடிகிறது. இந்துத்துவ கோட்பாட்டை எதிர்த்து கருத்துப் பரவலில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகவே மிரட்டப்படுவதோடு உயிருக்கும் உலை வைக்கும் போக்கு அதிகரித்து விட்டது.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி கொள்கையாளர்கள் மதவெறி அமைப்புக்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றனர். எழுத்தாளர் இரவிக்குமார் கொள்கை அளவில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டத்தின் நோக்கங்களை விமர்சனம் செய்து வருகிறார். மத நல்லிணக்கத்தை சீரழித்து, பன்முகத்தன்மையை அழிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள், இரவிக்குமார் போன்றவர்களுக்கு குறி வைத்து இருப்பதை மத்திய, மாநில அரசுகள் சாதாரணமாக கருதக்கூடாது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு
ராஜ்நாத்சிங் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், புதுவை மாநில அரசும், எழுத்தாளர் இரவிக்குமார் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.