VCK leader Thol.Thirumavalavan campaign, support of Kunnam constituency candidate SIvasankar !

பெரம்பலூர், குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ். எஸ். சிவசங்கரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அகரம்சீகூர் கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க கூட்டணியைப்போல பேரத்தால்,
பணத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட கூட்டணியல்ல இந்த கூட்டணி. கொள்கைக்காகவும், சமூக நீதியை பாதுகாப்பதற்க்காகவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க.அல்ல. அந்த அ.தி.மு.கவை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி. அந்தக் கட்சியை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே அடமானம் வைத்து விட்டார். தமிழகத்தை மீட்பதற்காக தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்குத்தான் போய்ச்சேரும். மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தை குறி வைத்து விட்டார்கள். தி.மு.க.வா, பா.ஜ.க.வா என்று தற்போது ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை எதிர்த்து நிற்கும் தகுதியை அ.தி.மு.க. இழந்து விட்டது. அந்த கட்சி அந்த அருகதையை இழந்து விட்டது. 5 ஆண்டு காலம் மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டை ஆண்டார்கள். அவர்களுக்கு தமிழ் பிடிக்காது. தமிழ் நாடு எனும் அழகான பெயரை தக்ஷினபிரதேசம் என்று மாற்றப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இன்று நாம் பேசும் தமிழ் மொழியை 25 ஆண்டுகளில் அழிப்போம் என்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்று நான் கூறி வருகிறேன்.

இந்தி வேண்டாம் என்றால் தமிழகத்தில் பி.ஜே.பி. விரட்டியடிக்க வேண்டும். பி.ஜே.பி. வேண்டாமென்றால் அ.தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும். நேரடியாக தமிழ் நாட்டிற்குள் நுழைய முடியாமல், அ.தி.மு.க. எனும் முகமூடியைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக நீங்கள் நம்பி விடாதீர்கள். இரட்டை இலை என்னும் பெயரால் தாமரை சின்னம் தான் போட்டியிடுகிறது. அது மிகவும் ஆபத்து. கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை அதனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் நுழைந்து எப்படி வேண்டுமானாலும் கூத்தடிக்கலாம் என்று கனவு திட்டம் போட்டு வருகின்றனர் மோடியும் அமித் ஷாவும். இதனால் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார்கள். நல்லது, அவர்கள் வர, வர நம்முடைய வெற்றியின் சதவிகிதம் கூடிக்கொண்டே இருக்கிறது. நம்முடைய தி.மு.க. வேட்பாளர்கள் எல்லாம் மோடிக்கு ட்விட்டர் பதிவு போடுகிறார்கள். மோடி அவர்களே எங்கள் தொகுதிக்கு வந்து பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யுங்கள் அப்போதுதான் நாங்கள் ஜெயிக்க முடியும். இன்று மோடியை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அழைக்கிற ஒரே தேசம் தமிழ் தேசம்தான். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மோடியின் பெயரை எழுதாமல், தாமரை படம் போடாமல் ஓட்டு கேட்கின்ற அவலம் நடைபெற்று வருகிறது. யோசித்துப் பாருங்கள் இது பெரியார் மண், இது சமூக நீதி மண், இது பகுத்தறிவால் பக்குவப்படுத்தப்பட்ட மண், இங்கு சாதி வெறிக்கு இடமில்லை, இங்கு மதவெறியர்களுக்கு இடமில்லை, சமாதான கும்பலுக்கு இடமில்லை, பி.ஜே.பி.க்கு இடமில்லை, பி.ஜே.பி யைத் தூக்கி வைத்து கொண்டாடக்கூடிய அ.தி.மு.க. வை விரட்டு காலம் வந்துவிட்டது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது. அ.தி.மு.க.வை தி.மு.க. அழிக்க போவதில்லை, பி.ஜே.பி. யே அழித்துவிடும். அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்கள் எல்லாம் பி.ஜே.பி. விலைக்கு வாங்கிவிடும். வெற்றி பெறுகின்ற சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவார்கள். அவ்வளவு மோசமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு கட்சி பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க. தொண்டர்களை எல்லாம் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் கல்வி கற்க, வேலைவாய்ப்பு பெற, தமிழில் பேச, தமிழ்நாட்டு உரிமைகளை காக்க, அரசு துறைகளில் நமது பிள்ளைகள் வேலையில் சேர, தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் தளபதி முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றும் தொல். திருமாவளவன், எம்.பி. பேசினார். கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!