Vellaru joint drinking water projects for 73 villages, Perambalur Collector personally inspected!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் லப்பைக்குடிகாடு பகுதியில் வெள்ளாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டார்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த 73 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பென்னகோணம் அருகில் வேப்பூர் ஒன்றியத்திற்கானாக வெள்ளாற்றில் நீர் உறிஞ்சுகிணறு அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள ரூ.22.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, நபார்டு வங்கி நிதி மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் திட்டம் நடைபெற்று வருகிறது.
வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள 73 கிராமங்களில் 2020 ஆம் ஆண்டின்படி மக்கள் தொகை 62,386 ஆகவும், 2035 ஆம் ஆண்டில் 74,589 ஆகவும் மற்றும் உச்சக்கட்ட மக்கள் தொகையாக 2050 ஆம் ஆண்டு 87,270ஆகவும் உயர வாய்ப்புள்ளதால், இத்திட்டத்தில் 73 கிராமங்களுக்கான தினசரி குடிநீர் தேவை முறையே 2.91 மில்லியன் லிட்டர், 3.47 மில்லியன் லிட்டர் மற்றும் 4.05 மில்லியன் லிட்டர் என கணக்கிட்டு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டு இத்திட்டம் வரையறுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பெண்ணகோணம் அருகில் 4 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, வெள்ளாற்றின் தென்கரை அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்திலிருந்து 68.93 கி.மீட்டர் தூரத்திற்கு நெகிழ் இரும்பு குழாய் அமைத்தல், தற்போது அமைக்கப்பட்டுள்ள 5 தரைமட்ட தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள இரண்டு தரைமட்ட தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 71 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கும் நீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே 109.54 கி.மீட்டர் நீளத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
05.10.2020 பணிகள் துவங்கிய நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக 15.10.2020-ல் நிறுத்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் 21.04.2021-ல் மீண்டும் துவங்கிய பணிகள் நடைப்பெற்று வரும்பொழுது 23.04.2021-ல் மீண்டும் எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 25.10.2021 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்களின் தலைமையில் லெப்பைக்குடிகாடு பொதுமக்களுடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் வேப்பூர் ஊராட்சி மக்களுக்கும் மட்டுமல்லாது, லெப்பைகுடிகாடு பேரூராட்சி பொதுமக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை கலெக்டர் ஏற்றுக் கொண்ட நிலையில் பணிகள் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன்படி, வெள்ளாற்றில் நீர் மட்டம் குறைந்த காலத்தில் தலைமையிடத்து பணிகள் தொடங்கப்பட்டு 4 நீர் உறிஞ்சு கிணறுகளின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நீர் சேகரிப்பு கிணறு பணியில் 30% விழுக்காடும், ஏனைய பணிகளில் 75% விழுக்காடும் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த 27.09.2022 அன்று லெப்பைகுடிகாடு பொதுமக்களின் ஒருபிரிவினர் பணிக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெள்ளாற்றில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் கற்பகம் இன்று பார்வையிட்டு முழுமையாக ஆய்வு செய்தார்.
பின்னர் தெரிவிக்கப்பட்டதாவது: ”குடிநீர் என்பது அனைவருக்கும் பொதுவானது. குடிநீர் என்பது அனைவரின் அடிப்படை தேவை. எனவே, அரசின் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம், இத்திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை எடுத்துக்கூறி, இத்திட்டம் குறித்த அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இதுகுறித்து மக்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.” என்று குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர், லெப்பைகுடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர், குன்னம் வட்டாட்சியர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்கிடும் வகையில் மீதமுள்ள பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நோவா நகர் பகுதியில் ரூ.7.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பணியினையும், ரூ.4.08 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பணியினையும், ரூ.10.73 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் பேவர் பிளாக் அமைக்கப்படவுள்ளதையும், ரூ.2.65 மானியத்தில் கட்டப்பட்ட குடியிருப்பினையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திருமாந்துரை பகுதியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக சந்தை அமைக்கப்பட்டு பல நாட்களாக பயன்பாட்டில் இல்லாத நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு, அங்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சிகளின் மூலம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள். லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று, அலுவலக பதிவேடுகள், புதிய திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், பணிகளின் தற்போதை நிலை, வரவு செலவு பதிவேடுகள் போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் வ.லோகநாதன், உதவி நிர்வாகப்பொறியாளர் கோ.மகாலிங்கம், லப்பைகுடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன், குன்னம் வட்டாட்சியர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப்பயைன், செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.