Vellaru Joint Water Project for 73 Villages : Perambalur Collector Inspection!
பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் ஊராட்சியில், வேப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 73 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட நீர் சேகரிப்பு கிணற்றினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேப்பூர் ஒன்றியத்தில், வெள்ளாற்றினை நீராதாரமாகக் கொண்டு 73 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதியுதவி மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம், குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய 3.47மில்லியன் லிட்டர் முதல் 4.05 மில்லியன் லிட்டர் வரை நீர் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 4.05 மில்லியன் லிட்டர் குடிநீரை பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பென்னகோணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நான்கு நீர் உறிஞ்சி கிணறுகள் மூலம் 61 குடியிருப்புகளுக்கு வழங்கவும் மற்றும் ஏற்கனவே செயலில் உள்ள 645 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள உபரி நீரை 12 குடியிருப்புகளுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4 நீர் உறிஞ்சி கிணறுகளின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2.85 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து 7.62 கி.மீட்டர் தூரத்திற்கு புதிதாக பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஏற்கனவே உள்ள 5 தரைமட்ட தொட்டிகளிலும் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தரைமட்ட தொட்டிகளிலும் நீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து 39.54 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஏற்கனவே உள்ள 71 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டபட்டுள்ள 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு, பிறகு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயனில் உள்ள 109.54 கி.மீட்டர் நீள பகிர்மான குழாய் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 645 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள உபரி நீரை 21.82 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் ஏற்கெனவே உள்ள 8 தரைமட்ட தொட்டிகளுக்கு நீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து ஏற்கெனவே பயனில் உள்ள 12 எண்ணம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படும். பிறகு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் இருந்து ஏற்கெனவே பயனில் உள்ள 18 கி.மீட்டர் நீள பகிர்மான குழாய் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 05.10.2020 அன்று வழங்கப்பட்டு இதுவரை 95 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 30.11. 2023 க்குள் பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்: