பெரம்பலூர் மாவட்டம் , வெள்ளாற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 11 லட்சம் மதிப்பில் அத்தியூரில் அணைக்கட்டு கட்டும் பணியினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, இன்று துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வெள்ளாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறையின் மூலம் நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் இந்த அணைக்கட்டு கட்டும் பணி 20.01.2016-அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த அணைக்கட்டின் மூலம் வெள்ளாற்றின் நீர் வீணாகாமல் தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ரூ.8.11 கோடியில் சுமார் 240 மீட்டர் நீளமும், 1.71 மீ உயரமும் கொண்ட கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு அதிலிருந்து வரத்து வாய்க்கால்கள் மூலம் சுமார் 257 கன அடி நீர் கொண்டு செல்லப்பட்டு அத்தியூர், கிழுமத்தூர், கைப்பெரம்பலூர் மற்றும் வயலூர் ஏரிகள் நிரப்பப்பட்டு சுமார் ஆயிரத்து 204.80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்து தரப்படும்.
இந்த அணைக்கட்டின் மேல்புறமும் கீழ்புறமும் வெள்ளக்கரை அமைக்கும் பணியும் மேலும் இரண்டு புறங்களிலும் மணற்போக்கியும் அமைக்கப்படவிருக்கிறது. இதில் சுமார் 10 கி.மீ நீளத்திற்கு வரத்து வாய்க்கால் சீர் செய்யப்பட்டு கரையை பலப்படுத்தும் பணியும் செய்யப்படவிருக்கிறது. இந்த பணியானது 12 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளாற்றில் தொழுதூர் அணைக்கட்டின் கீழே 30 கி.மீ நீளத்திற்குள் எந்த அணைக்கட்டும் கட்டப்படவில்லை. எனவே இந்த திட்டம் செயல்படுத்துவதால் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர் உயரவும் கால்நடைகள் பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுப்புறம் செழிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிப்பப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெய்வீகன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவிப்பொறியாளர் புகழேந்தி, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா தீனதயாளன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பாசன சங்க தலைவர்கள், விவசாய சங்க தலைவர் ராமராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.