Venture near Perambalur: 14 pounds, 2.30 lakhs stolen from adjacent brothers’ houses!
பெரம்பலூர் மாவட்டம், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராமசாமி (60), கணேசன் (57), சுப்பிரமணியன் (55). விவசாய தொழிலாளர்களான 3 பேரும் அருகருகே உள்ள தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள ஆடு, மாடு வளர்த்து வரும் கொட்டகையில் குடும்பத்துடன் ராமசாமி தங்கினார். இதேபோல் கணேசன் அருகே உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கினார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமசாமி கொட்டகையில் இருந்து எழுந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து செயின், வளையல், தோடு உள்ளிட்ட 14 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
அதேபோல் கணேசனும் நேற்று அதிகாலை தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரூ.1.9 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அதேபோல் சுப்பிரமணியன் வீட்டில் உள்ளவர்கள் அரியலூரில் வசிக்கின்றனர். இருப்பினும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் எதுவும் கொள்ளை அடிக்க வில்லை. தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து, வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்களுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த சகோதரர்கள் வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.