Village Presidents must ensure 100 percent of safe drinking water, sanitation and street lighting: Perambalur Collector instructions!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும், பொதுமக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைகள் ஏற்படாதவாறு நீர்வள ஆதாரங்களை புனரமைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு திட்டங்களின் கீழ் பொது கிணறுகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்ப்டடும் இன்னும் பணிகள் தொடங்காத நிலை உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்னும் 3 நாட்களுக்குள் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிட வேண்டும். வீட்டு இணைப்பு குழாய் வழங்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மை காவலர்களால் சேகரம் செய்யப்படும் குப்பைகளை, மேலாண்மை செய்ய ஊராட்சிக்கு தலா இரண்டு ஏக்கர் பரப்பளவு இடங்களை தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக குப்பைகள் சேகரம் செய்பவர், சேகரம் செய்யப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்க வேண்டும்.
தெருக்களில் நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் உற்பத்தியாகும் கழிவுநீரை நேரடியாக நீர் நிலைகளில் கலப்பதை தவிர்க்கும் பொருட்டு சமுதாய வடிகட்டி (chock pit) பணிகளை விரைந்து முடித்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
கிராமப்புற மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பொது சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தனிநபர் இல்லக் கழிப்பறைகள் பொதுமக்களுக்கு தேவைப்படுமாயின் தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கருத்துரு சமர்பித்து நிர்வாக அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதோடு மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். எந்தப் பள்ளியிலும் குடிநீர் வசதியோ கழிப்பறைக்கான தண்ணீர் வசதியோ இல்லை என்ற நிலை இருக்க கூடாது.
கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குள் 100 சதவீத எரிவதை உறுதி செய்வதோடு அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விளக்குகள் எரிவதை ஆய்வு செய்ய வேண்டும்.
15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதியை வழங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்ட உட்கட்டமைப்பு பணிகளை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நிலுவை பணிகளை 29.02.2024-க்குள் விரைந்து முடிக்க வேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சசி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.