பெரம்பலூர் : நேற்று தேர்தல் அறிவித்த பின்பு நடத்தை விதிமுறையை மீறி தனது சொந்த ஊரான எளம்பலூரில் எம்எல்ஏ., தமிழ்செல்வன் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அவசர அவசரமாக லேப்டாப்களை வழங்கினார். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று (4 ம் தேதி) மாலை 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று முதல் தேர்தல்
நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில் தனது சொந்த ஊரான பெரம்லூர் அருகே எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடத்தை
விதிமுறையை மீறி 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எம்எல்ஏ., தமிழ்செல்வன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக லேப்டாப்களை வழங்கினார்.
தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணியளவில் அறிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் நேற்று மாலை 4மணி முதல் 5 மணி வரை லேப்டாப்களை எம்எல்ஏ., தமிழ்செல்வன் வழங்கியதும், அதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் உறுதுணையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று அதே பள்ளிக்கு டேபிள், சேர் உள்ளிட்ட தளவாட பொருட்களை எம்எல்ஏ., வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி லேப்டாப்கள் வழங்கிய தகவல் செய்தியாளர்களுக்கு தெரிய வந்ததால், டேபிள், சேர் வழங்கும் நிகழ்ச்சி கைவிடப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறையை பின் பற்றாத அதிகாரிகள் மீது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆட்சியர் அலட்சிய போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்மென சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.