Vocational schools recognized extension: apply to fresh start || தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு : புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சிநிலைய முதல்வர் ப.மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார் தொழிற்பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள் மற்றும் 36 குறுகிய கால தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான அங்கீகாரம் வழங்கவும் ஏற்கனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டுவரும் தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். மேலும் கடந்த ஆண்டு வரை இத்துறையின் மூலம் விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கும் நடைமுறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் இத்துறையில் பெறப்பட்டுவருகிறது.
எனவே தொழிற் பள்ளிகள் புதிதாக துவங்கவும், அங்கீகார நீட்டிப்பு ஆணை பெறவும் விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவே 30.04.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை எளிதாக்கவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளவும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.