Voicing in the UN to punish Sri Lanka: Resolution in the Legislative Assembly PMK Ramadoss

File Copy

பா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குக் காரணமான சிங்களப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை. போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் கடமை இருந்தும், அதை இந்தியா நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்னால் தொடங்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தி வருவதுடன், உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது. அதன்பயனாக இலங்கைப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 34-ஆவது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அப்போது வரை, இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே, சிறிசேனா, சரத் பொன்சேகா மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை தாமதமாவதாகவும், மேலும் இரு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இலங்கை கோரியது. அதன்படியே அவகாசம் வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட அவகாசமும் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறு துரும்பைக் கூட சிங்கள அரசு அசைக்கவில்லை. மாறாக, போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. மற்றொரு பக்கம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்துதல், கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட கொடூரங்களை இலங்கை அரங்கேற்றியது. இலங்கையின் அதிபராக ராஜபக்சே இருந்தாலும், சிறிசேனா இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மட்டும் குறைவில்லை. எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இந்தக் கொடுமைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, கண்டிக்கவும், தண்டிக்கவும் முன்வரவில்லை.

போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அடைந்த தோல்வி குறித்த அறிக்கையை ஜெனிவாவில் இம்மாதம் 25&ஆம் தேதி தொடங்கவுள்ள மனித உரிமைப் பேரவையின் 40-ஆவது கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்யவுள்ளார். அதில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 20&ஆம் தேதி இலங்கை போர்க்குற்றம் குறித்து பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாள் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. போர்க்குற்றவாளிகள் மீது இலங்கை இன்று வரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அதன் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே,‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐநா மனித உரிமை ஆணையம் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

இவற்றை செய்ய இந்திய அரசு தவறினால, ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலைக்கு இனி எந்தக் காலத்திலும் நீதி கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த இரு முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அரசுத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!