Volcanic eruption in Indonesia; 222 people killed in tsunami More than 1,000 people are injured
எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. ஜாவா தீவின் மேற்குப்பகுதியில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகையும் வெளியேறி கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக்குழம்பும் வெளியாகியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்து குலுங்கியது. சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ஜாவா தீவில் பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங் பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங் நகரையும் துவம்சம் செய்தன. அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ரோடுகள் மற்றும் ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் ஓட்டல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சுனாமி தாக்குதலில் 222 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் காயம் அடைந்தனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 430 வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. 9 ஓட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 எந்திர படகுகள் உடைந்து நொறுங்கியது. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜாவா தீவில் உள்ள பான்டெக்லாங் பகுதிதான் கடும் பாதிப்புக்குள்ளானது. அங்கு உஜங்குலான் தேசிய பூங்கா மற்றும் பிரசித்தி பெற்ற கடற்கரைகள் உள்ளன. அவை சுனாமி தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன. இங்கு மட்டும் 33பேர் உயிரிழந்துள்ளனர். பான்டெக்லாங்கில் மெட்ரோ டிவி நிலையம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்னும் பலரை காணவில்லை. அவர்களை உறவினர்கள் தேடிவருகின்றனர். இதே நிலை பல இடங்களிலும் காணப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.