We focus on people’s work: do not fight against the minister! Anbumani MP

தர்மபுரி எம்.பி அன்புமணி விடுத்துள்ளஅறிக்கை :

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எனக்கு எதிராக தெரிவித்த சில கருத்துகளைக் கண்டித்து தருமபுரி மாவட்டம் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் கைதாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் அமைச்சருக்கு எதிராக போராட்டங்களை நடத்தப் போவதாக பா.ம.க. நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் என்மீது கொண்டுள்ள அன்பையும், மதிப்பு மற்றும் மரியாதையையும் நான் அறிவேன். அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனாலும், ஓர் உன்னத லட்சியத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் போது இடையில் சில சில்வண்டுகளின் திசை திருப்பல்களுக்கு ஆளாகி தடம் மாறினால் நாம் நமது இலக்கை எட்ட முடியாமல் போய்விடும் என்பதை உணர வேண்டும். நாம் நடத்தும் போராட்டங்கள் உன்னத இலக்குகளைக் கொண்டவையாக இருக்க வேண்டும்; நமது எதிரிகள் கூட நமக்கு இணையான வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அமைச்சர் அன்பழகன் நமக்கு எதிரியாக இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்; அவர் ஒரு மக்கள் துரோகி; அதற்காக வரும் தேர்தலில் அவரை மக்கள் தண்டிப்பார்கள். எனவே, அவருக்கு எதிரான போராட்டங்களில் நமது சக்தியை வீணடிக்க வேண்டாம். மக்கள் நலப் பணிகளில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாகரிகமான, வளர்ச்சி அரசியல் (Decent and Development politics)தான் நமது கொள்கை என்பதால், அதற்கேற்ற வகையில் கண்ணியமான அரசியலை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.

அமைச்சர் அன்பழகன் என் மீது அவதூறு சேற்றை வாரி இறைப்பதற்கான காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சியினரும், தருமபுரி மாவட்ட மக்களும் நன்றாக அறிவார்கள். அமைச்சர் அன்பழகனோ, அவர் சார்ந்த அரசியல் இயக்கமோ தருமபுரி மாவட்ட மக்களின் நன்மைக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக அரசு பணி சார்ந்த ஒப்பந்தங்களை குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயர்களில் எடுத்து ஊழல் செய்வதில் மட்டும் தான் அமைச்சர் அன்பழகன் ஆர்வம் காட்டி வருகிறார்.

மாறாக, பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலனில் மட்டும் தான் அக்கறை காட்டி வருகிறது. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் முதல் இடம் தருமபுரி மாவட்டம். எனவே, காவிரி நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் உரிமை தருமபுரி விவசாயிகளுக்கு உள்ளது. அதிக மழை பெய்யும் காலத்தில் மிகை நீரை தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு வெறும் 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் போதுமானது. இதனால் விவசாயம் செழிக்கும்.

அவ்வாறு செழித்தால் பிழைப்புத் தேடி பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்தவர்கள் தருமபுரிக்கு மீண்டும் திரும்புவார்கள். இது தான் தருமபுரி மாவட்டத்திற்கு செய்யப்படும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். அதனால் தான் அத்திட்டத்தையும், ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்குவோம் என அறிவித்து, கையெழுத்து வாங்கும் இயக்கத்தை கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி தருமபுரியில் தொடங்கி வைத்தேன்.

தருமபுரி மாவட்ட மக்களிடையே அந்த இயக்கத்துக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவு அமைச்சர் அன்பழகனை கலவரப்படுத்தியுள்ளது. அதனால் தான் மிரட்சியடைந்த குதிரை கண்மூடித்தனமாக ஓடி சேதத்தை ஏற்படுத்துவதைப் போல என் மீது அவதூறை சேற்றை வாரி இறைத்திருக்கிறார். அவர் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இரண்டாவது முறை அமைச்சராக இருப்பவர். கடந்த 20 ஆண்டுகளில் எந்த அரசு விழாவிலும் 46 நிமிடங்கள் அவர் உரையாற்றியதில்லை; எந்த திட்டம் குறித்தும் 46 நிமிடங்கள் அவர் விளக்கியதில்லை. ஆனால், என்னைப் பற்றி விமர்சிக்க செய்தியாளர் சந்திப்பில் 46 நிமிடங்களை செலவழித்திருக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு மிரண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் எதிரி எதைக் கண்டு அஞ்சுகிறானோ, எதைக்கண்டு மிரளுகிறானோ அதையே அவனுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவது தான் சிறந்த உத்தியாகும்.

அந்த வகையில், தருமபுரி மாவட்ட மக்களின் நலனுக்காக நாம் ஆற்றும் பணிகள் கே.பி அன்பழகனை மிரள வைக்கும் நிலையில், அதையே நாம் இன்னும் தீவிரமாக செய்ய வேண்டும். பா.ம.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர் போராட்டங்களின் பயனாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிகரமாக எப்படி கொண்டு வந்ததோ, அதேபோல் காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தையும் நாம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிப்போம். இது உறுதி. இதற்கு வசதியாக, அமைச்சர் அன்பழகனுக்கு எதிராக போராட்டங்களை நிறுத்திக் கொண்டு, அத்திட்டத்திற்காக மக்களின் கையெழுத்தை பெறும் பணிகளில் தீவிரம் காட்டும்படி தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!