We need to save a fortune without luxury and save for the future: Namakkal collector advice
பொதுமக்கள் ஆடம்பரம் இல்லாமல் சிக்கனமாக இருந்து எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்டஆட்சியர் பேசினார்.
நாமக்கல் மாவட்ட சிறு சேமிப்புத்துறை சார்பில் உலக சிக்கன நாள் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிறு சேமிப்பு (பொ) பிரியா வரவேற்றார். விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவ மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
சிக்கனத்தின் அவசியம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தினமாக உலக சிக்கன நாள் விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றால்,தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வீண் விரயம் செய்யாமல், ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் திட்டமிட்டு செலவிடவேண்டும்.
அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்வதுடன், சமூக தீமைகளில் ஈடுபட்டு பொருள் இழப்புக்கு வகை செய்யாமல் இருப்பது போன்ற நல்ல பண்புகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சிக்கனமாக இருந்து சேமிக்கும் பணத்தை பொதுமக்கள், அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் அவரவர் வருமானத்துக்கும், வருங்காலத்துக்கு ஏற்ப தேர்வு செய்து முதலீடு செய்யவேண்டும்.
பொதுமக்கள் அஞ்சலகங்களில் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து சிறுசேமிப்பு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதன்மூலம் தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு வரியில்லா வருமானமாக நிதி ஆதாரத்தை அளித்து அரசுக்கு உதவி செய்யவேண்டும் என பேசினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவில் நாமக்கல் வட்டாசியர் செந்தில் குமார், நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், சிறு சேமிப்பு முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.