We will strive to improve the quality of education and teachers! PMK Ramadoss


பா.ம.க நிறுவனர் இராமதாஸ் விடுத்துள்ள ஆசிரியர் நாள் வாழ்த்து செய்தி:

மாணவர்களை கரை சேர்க்கும் படகாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூகக் கடமை உள்ளது. தமிழக பாடத்திட்டம் சிறப்பானதாக மாற்றப்பட்டுள்ள போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன.

11 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு அடுத்தவாரம் நடைபெறவுள்ள நிலையில் 11-ஆம் வகுப்புக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கான தமிழ் தவிர்த்த பிற மொழிப்பாட நூல்கள் இதுவரை வினியோகிக்கப்படவில்லை.

புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையான பயிற்சி அளிக்கப்படவில்லை. இவை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாததால் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சமூகத்திற்கு ஏற்றம் தரும் ஏணியாக திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏழாவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்த பிறகும் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நலனுக்கான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய ஆசிரியர்கள் மீது பொய் வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த நிலை மாற்றப்பட்டு தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன்,ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!