Welfare Program Assistance at Perambalur Sri Lankan Refugee Camp: VC Party Leader Thole Thirumavalavan presented

file Copy

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இல்லை. கவர்னர் உடனான முதலமைச்சரின் சந்திப்பு வழக்கமான சந்திப்புதான். எனது தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவேன்.

தமிழகத்தில் போதிய அளவு பரிசோதனைகளை மேற்கொள்ள வில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. நாட்டில் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள வெகுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் மத்திய அரசு 20 லட்சம் கோடி தற்சார்பு பொருளாதார மீட்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதில் உடனடி நிவாரணம் மக்களுக்கு போய் சேர கூடியவகையில் எதுவும் இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உருப்படியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. செயல் திட்டத்தையும் வரையறுக்க வில்லை என்பது இன்னும் வேதனை அளிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் மிகப்பெரும் அவலத்தை சந்தித்திருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

கோயம்பேடு சந்தையில் வேலை செய்த தொழிலாளர்கள் சென்ற அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிக அதிகமான அளவில் தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.கோயம்பேடு சந்தையை அரசு கண்டைன்மெண்ட் செய்து இருக்க வேண்டும்.அல்லது அங்கிருந்து வெளியேறிய தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று இறங்கும் போதே மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதில் ஏற்பட்ட தோல்வி தீவிரமான தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்து விட்டது. இது குற்றச்சாட்டுக்காக அல்ல விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
அதில் குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட, கவனிக்கப்படாத, விளிம்புநிலை மக்களான நரிக்குறவர்கள், இருளர், உள்ளிட்ட பழங்குடியின மக்கள், திருநங்கைகள், திருநம்பிகள், மாற்றுத்திறனாளிகள், ஈழத்தமிழர்களின் குடியிருப்புகள் என்று விளிம்பு நிலை சமூகத்தை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று பெரம்பலூரில் அமைந்துள்ள ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் 80 குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்துள்ளேன். இதனைத்தொடர்ந்து குன்னம் மற்றும் அரியலூரில் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், தையல் கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் 350க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறோம். இது தமிழக தழுவிய அளவில் தொடரும்.

முழு அடைப்பை நீட்டிக்க வேண்டும் என்று சொல்ல இயலவில்லை. ஆனால் முழு அடைப்பு காலத்தை சரியாக நாம் பயன்படுத்தி கொண்டோமா அதாவது அரசு ஆட்சி ஆட்சி நிர்வாகம் என்ற கேள்வி எழுகிறது. 68 நாட்களை கடந்து வந்திருக்கிறோம், பிற நாடுகளை ஒப்பிடும் போது இறப்பு மற்றும் பரவல் சதவீதம் குறைவாக இருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அடிப்படை உண்மை பரிசோதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது தான்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன. அரசுக்கு வேறு வழியில்லை என்பதை நாம் உணர்ந்தாலும் கூட, இப்படி தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் தொற்று பரவலை தடுப்பதற்கு உரிய மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அரசு செய்யவில்லை என்ற கவலை மேலோங்குகிறது.

குறிப்பாக மருத்துவ பரிசோதனை சாதனங்கள் போதிய அளவில் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், போதிய படுக்கை வசதிகள் இல்லை. அகில இந்திய அளவில் இந்த பற்றாக்குறை நீடிக்கிறது. ஆகவே இதையெல்லாம் சரி செய்யக்கூடிய அளவிற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குவதோடு, மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும், மருத்துவ கருவிகளை, உபகரணங்களை வாங்கவும், மேம்படுத்தவும் முடியும்.

தனிமைப்படுத்தும் போது ஏராளமான நெருக்கடிகள் இருக்கின்றன. அதை செய்ய இயலாத நிலையில் தான் அவரவர் சொந்தமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்ன அறிவுறுத்தப்படுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கூட கோயம்பேட்டில் இருந்து திரும்பி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது அரசு. சிறிய அளவிலான வீட்டில் அவர்கள் எப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்? எனவே ஒவ்வொருவரும் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் பிரதானமானது.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், என்ற அடிப்படையான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!