Wiktionary ‘Direction’ Nartramil Pavalar Award ‘!

தூயதமிழ்ச் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நற்றமிழ்ப் பாவலர் விருது’ அறிவித்துள்ளது.

மரபுக்கவிதை, புதுக்கவிதைகளில் மொழிக் கலப்பில்லாத நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் அச்சொற்களின் வீச்சு மக்களிடமும், எதிர்காலத் தலைமுறையினரிடமும் எளிதாகச் சென்றடையும். எனவே, பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி, கவிதைப் படைப்புகளை உருவாக்குவோரின் மொழிப்பற்றுக்கும், படைப்பாற்றலுக்கும் ஊக்கமளிக்கவும், இளம் தலைமுறையினரை மொழிக் கலப்பில்லாத படைப்பாற்றலை நோக்கி ஈர்க்கவும், தங்களது கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும் பாவலர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து, ‘தமிழ் அகராதியியல் நாள் விழா’வின்போது தங்கப்பதக்கம் மற்றும் ‘நற்றமிழ்ப் பாவலர் விருது’ வழங்கி, விருதுத் தொகையாக தலா 50,000/- உரூபாவும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து paavalarvirudu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ (அ) அஞ்சல் வழியாகவோ “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028″ என்ற முகவரிக்கு 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், தங்கள் படைப்புகளில் தூயதமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாக, கடைசியாக வெளிவந்த இரண்டு கவிதை நூல்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மின்னஞ்சல் வழியாகவோ, ஒளிப்படிகளாகவோ, புலனம் வழியாகவோ அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!