Wild animals destroying farmer’s field near Perambalur: Request to forest department to provide compensation!
பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே உள்ள பாப்பாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (40). இவர் அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அதில் மக்காச்சோளம் சாகுபடி செய்து, கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் இரைத்து கடந்த 3 மாதங்களாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வேப்பந்தட்டை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு பன்றிகள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி, பெரும்பகுதி மக்காசோள பயிர்களை கீழே தள்ளி அதில் இருந்த கதிர்களை மென்று குதறித் தள்ளி உள்ளது. இதனால் விவசாயி இளையராஜாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் விவசாயம் செய்துள்ள பலரது மக்காசோள வயல்களில் காட்டு பன்றிகள் தொடர் அட்டகாசம் செய்துள்ளது. மேலும் அவ்வப்போது மான்கள் கூட்டம் கூட்டமாக மக்காசோளம் வயலில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் வாழும் காட்டு பன்றிகள் மற்றும் மான்களினால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
எனவே, சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் வயலில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடுகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.