Will the farmers dispose of the farmers to set up the Power Towers? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உழவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு, காவல்துறை மூலமாக விளைநிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவையில் பெரும்பகுதி மத்தியத் தொகுப்பிலிருந்தும், பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்தும் தான் பெறப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைக் கொண்டு வருவதற்காக பல்வேறு மாவட்டங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டம் புகழூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாகவும், அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை ஆகிய இடங்களுக்கு தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் சார்பிலும் மொத்தம் 16 உயரழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து ‘உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் காரணமாக மின்பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்படும் இந்தியத் தந்தி சட்டத்தின்படி, மின்பாதை அமைக்கும் பணிக்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், திட்டப்பணிகளைத் தொடர முடியாது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான், இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் உழவர்களின் நிலங்களில் நுழைய முடியும் என்பது விதியாகும்.

ஆனால், இவ்விதியை மதிக்காத பவர் கிரிட் நிறுவனம் கோவை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, நிலங்களை அளந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது சட்ட விரோதமாகும். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் உழவர் அமைப்புகளுக்குமிடையே ஏற்கனவே இரு கட்டப் பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பேச்சுக்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பவர் கிரிட் நிறுவனம் செய்துள்ள அத்துமீறல் மன்னிக்க முடியாதது. இதைக் கண்டித்தும், பணிகளைக் கைவிட வலியுறுத்தியும் கோவை சுல்தான்பேட்டையில் விவசாயிகள் தொடர் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது. இத்தகைய மின்கோபுரத் திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!