Wire collapses on train near Kovilpatti: Many trains delayed – passengers suffer
கோவில்பட்டி அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது வயர் அறுந்து விழுந்ததால் இன்று காலை மீண்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தொட்டிலோவன்பட்டி பகுதியில் தொழிற்சாலையின் மேற்கூரை காற்றி பறந்து வந்து ரயில்பாதையில் உயர்அழுத்த வயர் மீது விழுந்தது. இதனால் சுமார் 5 கிமீ தூரத்திற்கு மின்சேவை துண்டிக்கப்பட்டது.
இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்செந்தூர், சென்னை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், தென் மாவட்டம் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அதிகாலை 2 மணி வரை மின்வயரை சீரமைக்கும் பணிகள் நடந்தது. இதனையடுத்து ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டனர். தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 11 மணிக்கு புறப்பட்டது. பின்னர், கோவில்பட்டியில் நிறுத்தப்பட்ட அந்த ரயில் 2.45 மணிக்கு மீண்டும் புறப்பட்டது. சுமார் 6 மணி நேரம் தாமதாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.30 மணிக்கு தொட்டிலோவன் பட்டி அருகே வந்த போது ரயில் மீது வயர் ஒன்று அறுந்து விழுந்தது. இதையடுத்து டிரைவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த வயர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் காலை 9.40 மணிக்கு சுமார் 1லீ மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.
இதனால் நெல்லையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில் சுமார் 2 மணிநேரம் தாமதாமாக செல்கிறது. ரயில்கள் தாமதமானதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.