Women are invited to apply for Rural poultry farming scheme: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழைபெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஊரகப்பகுதிகளில் ஏழை மக்கள் குறிப்பாக பெண்கள் பல காலமாக தங்களது புழக்கடைகளில் வளர்த்து அனுபவம் பெற்றுள்ள கோழி வளர்ப்புத் தொழிலை மேன்மை அடையச்செய்து அதன் மூலம் கிராமபெண்களின் பொருளாதாரம் மேம்பட கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வேலைவாய்ப்போடு இணைந்த நிரந்திர கூடுதல் வருமானம் பெறுவதோடு அவர்களை வருவாய் ஈட்டக் கூடிய சொத்துக்களின் உரிமையாளராகவும் மேம்படுத்தப்படுவர். ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கால்நடை உதவி மருத்துவர் மூலம் பயிற்சி அளித்து 4 வார வயதுடைய 50 நாட்டுரக கோழிகள் ஒன்றுக்கு ரூ.75 வீதம் ரூ.3 ஆயிரத்து 750க்கு 100 சதவீதம் இலவசமாக வழங்கவும் மற்றும் கோழிகளுக்கான இரவு தங்கும் கொட்டில் அமைக்க பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.
மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மருத்துவ உதவி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஒன்றித்திற்கு 200 அலகுகள் வீதம் 15 ஒன்றியத்திற்கு 3 ஆயிரம் அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்30 சதவீதம் பெண் பயனாளிகள் தாழ்த்தப்பட்டவராகவும் தேர்ந்தெடுத்து திட்டத்தினை செயல்படுத்த செயல்திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏழைகளின் பங்கு அடையாள எண் வைத்திருக்க இருக்க வேண்டும். கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட இலவச கறவைப்பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்,செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கோழி வளர்ப்புத் திட்டங்களில் பயனடைந்தவராக இருக்க கூடாது.
பயனாளிகள் பெண்களாகவும், அதிலும் விதவை, ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏழையாக இருக்க வேண்டும்.இத்தகைய தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.