Women’s College for Musiri ! The DMK alliance candidate Parivendhar @ TR. Patchamuthu Promise
முசிறியில் பெண்களுக்கு என தனியாக மகளிர் கல்லூரி அமைத்து கொடுக்கப்படும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து செயல்வீரர்கள் கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மாவட்டம், முசிறியில் நடைபெற்றது.
தலைமை வகித்த திமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியம் மற்றும் முசிறி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பாரிவேந்தர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், அவரது பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுவதுடன் உடனடியாக குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும்.
அதோடு, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விளைபொருட்களை உரிய விலை கிடைக்கும் வரை பாதுகாத்து வைக்க, குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைத்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தாத்தையங்கார்பேட்டையல் வெங்காய குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும், காவிரி – முள்ளிப்பாடி வாய்க்கால் திட்டம் செயல்படுத்தப்பட்டு, காவிரி ஆற்று நீரை கொண்டு வந்து விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,
குணசீலம், ஆம்பூர், கோட்டூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முடங்கி கிடக்கும் கோரைப்பாய் தொழிலை மீண்டும் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுப்பதுடன், விற்பனை சந்தை ஏற்படுத்தி கொடுக்கப்படும்,
ஒடுவனந்தூர் – கொரம்பு, ஸ்ரீராமசமுத்திரம் – கொரம்பு, மற்றும் தொட்டியம் – லாலாபேட்டை பகுதிகளுக்கு தடுப்பனை ஏற்படுத்தப்படும்.
ஏழை – எளிய மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், சிறு, குறு தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விளையும் வாழைத் தார்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுக்கப்படும் என செயல்வீரர்கள் கூட்டத்தில வேட்பாளர் பச்சமுத்து தெரிவித்தார்.
கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் யூனியன் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்துவிற்கு வாக்குகள் சேகரித்தனர்.
இதே போன்று, தொட்டியத்திலும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்துவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி செய்வது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!