Women’s Entitlement Scheme applications will be delivered door to door: Perambalur Collector Information!
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்படும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், இத்திட்டம் தொடர்பாக வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் எலந்தலப்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 185 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் க.கற்பகம் இன்று வழங்கிய கலெக்டர் கற்பகம் பேசியதாவது:
மக்கள் தங்கள் கோரிக்கைகளை வழங்க அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வழக்கம், அரசு திட்டத்தால் இன்று மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகமே ஓர் இடத்தில் கூடி மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்படுவதே மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 40 மனுக்கள் பெறப்பட்டு 36 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், அடைக்கம்பட்டி கிராமத்தில் மெட்டல் சாலை அமைத்தல், பி.சி காலனியில் மெட்டல் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வீடு வீடாக வந்து குடும்பத் தலைவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க 282 நியாயவிலைக்கடைகளின் அமைவிட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பம் வழங்கும் போது அதை எந்த நாளில் எந்த தேதியில் சிறப்பு முகாமில் வழங்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கனும் குடும்பத் தலைவிகளிடம் வழங்கப்படும். இதனால் சிறப்பு முகாமில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பயனாளிகள் கூடுவதை தவிர்க்க இயலும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாம்களில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். தங்களுக்கு வழங்கப்படும் படிவத்தை சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவிகள் மட்டுமே வந்து வழங்கிட வேண்டும். வேறு யாரும் கொண்டு வரக்கூடாது. ஏனெனில் சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட நபரின் விரல் ரேகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
முகாமிற்கு வரும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண அட்டை, நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை குடும்பத்தலைவிகள் எடுத்துக்கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் ஒட்டப்படும். அதுமட்டுமில்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
கடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது அதிகப்படியான மனுக்கள் கலைஞரின் மகளிர் உரிமை தொகை பெற பிப் எண் தேவைப்படுவதாலும் அது போன்ற எண் எங்களிடம் இல்லை என பலர் மனு அளித்திருந்தனர். இது தவறான தகவலாகும். இத்திட்டம் குறித்து இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
திட்டம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை அணுகி அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
எனவே, கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கும், படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதன் காரணமாக கல்வி கடன் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கடன் மட்டுமல்லாது தாட்கோ, டாம்கோ, டாம் செட் கோ போன்ற திட்டங்களின் கீழ் கடனுதவிகள் பெற ஜூலை 25 ஆம் தேதி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள நீரோடையில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் இதனை அகற்றி தருமாறு ஒரு கோரிக்கை மனு வரப்பெற்றுள்ளது. அது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாகத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் பணி செய்யும் பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள நீர் நிலைகளை தங்களுடைய சொத்தாக கருதி நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும். கல்விதான் மாணவர்களின் சொத்து. கல்வி இருந்தால் எதனையும் சாதிக்கலாம். எனவே மாணவர்களை படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் 185 பயனாளிகளுக்கு ரூ.1,22,95,350 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆலத்தூர் யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட அனைத்து துறை அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.