Women’s self-help group petitions Perambalur Collector demanding loan from co-operative society
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க மறுப்பதாகக் கூறி அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழுவினர் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர போர்டு நிர்வாகம் அமையும் வரையில் தனி அலுவலரை நியமித்து தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் விவசாயிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்களுக்கு உடனடி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலத்தில் அரசு அறிவித்தவாறு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு தலா 5ஆயிரம் முதல் குழுவிற்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்க வேண்டும், வழக்கம் போல் நகைக்கடன் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் மக்கள் வறுமையில் உள்ளதால் நுண் நிதிக் கடன், தனியார் நிதி நிறுவனக் கடன், கூட்டுறவுக் கடன் ஆகியவற்றை கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா நோய் தொற்று பொதுமுடக்கம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்திற்கு மாதம் ரூ 7ஆயிரத்து 500 மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும், கிராமப்புற மக்களோடு நேரடியாக சேவை செய்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற வேண்டும், கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி சிபிஎம் நிர்வாகி எம்.கருணாநிதி, செல்லமுத்து உள்பட ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.