World Population Day: Free Birth Certificate for Children born at Perambalur Government Hospital
இன்று ஜுலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச பிறப்பு சான்றிதழ்களை இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி வழங்கினார்.
பிறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் வயது, பாலினம் தேதிய குடியுரிமை ஆகியவற்றைக் காட்டும் சட்ட ரீதியான சான்று ஆகும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பிறப்பு சான்று என்பது தேவையான ஒன்றாகும். தற்போது புதிய மென்பொருள் மூலமாக 01.10.2017 முதல் பிறப்பு இறப்பு பதிவு செய்யப்பட்டு, மென்பொருள் மூலம் சான்று தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் PICME எண் வழங்கப்பட்டு பிறப்பு, இறப்பு பதிவு மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டு பிறப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
மென்பொருள் மூலம் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் நம்பகத்தன்மை உடையது. சான்றிதழின் கீழ் உள்ள கியு.ஆர் குறியீடு மூலம் சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளலாம்.
அரசு மருத்துவமனையிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெறும் அனைத்து பிரசவங்களுக்கும் பிறப்பு சான்றிதழ் குழந்தை பெயர் இன்றி இலவசமாக வழங்கப்படும். குழந்தையின் பெயர் வைத்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளரிடம் குழந்தையின் பெயரை ஒரு வருடத்திற்குள் பதிவு செய்து பிறப்பு சான்று பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (பொ) மரு.சசிகலா, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் இயக்குநர் மரு.ப.சம்பத், நகராட்சி ஆணையர் வினோத், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தர்மலிங்கம் மற்றும் சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் டி.கரோலின் பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.