World Tuberculosis Day Awareness Rally: Perambalur Collector Inaugurated!

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடையே காசநோய் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி அன்று உலக காசநோய் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் நுண்கிருமிகளால் காச நோய் உண்டாகிறது. இந்நோய் காற்றில் பரவும் தொற்று நோயாகும். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்கும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் மற்றும் சளி, பசியின்மை, மாலை நேர காய்ச்சல், சளியில் இரத்தம் வருதல், மார்பு வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காச நோய் ஆறு மாத சிகிச்சையில் முற்றிலும் குணமடைய செய்ய முடியும் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கோஷம் எழுப்பியவாறும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டும் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 456 காச நோயாளிகள் உள்ளனர். இதில் சாதாரண காசநோய் 441 நபர்களுக்கும், வீரிய காசநோய் 09 நபர்களுக்கும், ஹெச்ஐவி, டி.பி. நோய் 6 நபர்களுக்கும் உள்ளது.

மக்களின் இருப்பிடத்திற்கே சென்று காச நோய் கண்டறியும் முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஊர் என நடமாடும் எக்ஸ்ரே வாகனம் ஒரு வருடமாக பயன்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 23 விழிப்புணர்வு கூட்டங்களும், பொது மக்களுக்கு 21 விழிப்புணர்வு கூட்டங்களும் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் தொடர் நடவடிக்கைகளால் காச நோயாளிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30% குறைந்துள்ளது. 87.5% காசநோயாளிகள் இந்த ஆண்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (காசநோய்) ரா.நெடுஞ்செழியன், இணை இயக்குநர் (பொது சுகாதாரம் க.அசோகன், இருக்கை மருத்துவர் ச.சரவணன், நகராட்சி துணை தலைவர் ஹரி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!