Youth Honor Killing in Pune The request to investigate the Tamil Thesiya Periyakkam

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கை!

கடலூர் மாவட்டம் – திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரைச் சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் – ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் பரந்தாமன், தான் பணியாற்றி வந்த மகாராட்டிரா மாநிலம் – புனேயிலுள்ள விடுதி அறையில் கடந்த 04.01.2018 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, கந்துவட்டித் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளம்பெண் சிவானி என்பவரை காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில்தான் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமெனக் கூறி, சற்று நேரத்திற்கு முன்பு (07.01.2018) இறையூரில், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பெண்ணாடம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி இளைஞர்களையும் அரசியல் இயக்கப் பொறுப்பாளர்களையும் கைது செய்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பேசியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், சி.பி.எம். வட்டச்செயலாளர் தோழர் காமராஜ், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் திரு. பத்மநாபன், “சே” தோழர்கள் திரு. சத்தியசீலன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோரும், 30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு பெண்ணாடம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பத்மநாபனும், சிவானியும் கடந்த 2018 ஏப்ரல் மாதம், ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையான வயது ஆவணங்களை அளித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சிவானிக்கு 18 அகவை முடியவில்லை எனக் கூறி, பரந்தாமன் மீது அவரது உறவினர்கள் 17.04.2018 அன்று மதுரை – சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். இதனையடுத்து, பரந்தாமன், அவரது தந்தை சபாபதி மற்றும் நண்பர்களை பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போஸ்கோவில் வழக்குப் பதிவு செய்து 21.04.2018 அன்று மதுரை நடுவண் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். காப்பகத்திலிருந்த சிவானி பெற்றோரிடம் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற போது சிறையிலிருந்து நீதிமன்றத்தில் நேர்நிற்க வந்த பத்பநாபனை சிந்துப்பட்டி காவல் நிலையக் காவலர்கள் முன்பாகவே, சிவானியின் உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, இவ்வழக்கிலிருந்து கடந்த 25.12.2018 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான பரந்தாமன் சிந்துப்பட்டி காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டுள்ளார். அப்போதும், பத்மநாபனுக்கு சிவானியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். “எங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலித்துவிட்டு, எங்கள் ஊருக்கு வந்துவிட்டு உயிரோடு போக விட்டுவிடுவோமா? 15 நாளில் உன்னை காலி செய்து விடுவோம்” என்று கூறியுள்ளனர்.

கடைசியாக, கடந்த 03.01.2018 அன்று மாலை இவற்றையெல்லாம் தனது தந்தை சபாபதிக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த பரந்தாமன், சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் தன் மீது மேலும் வழக்குகள் போடவுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னை அவர்கள் வாழ விடமாட்டார்கள் என்றும் பேசியுள்ளார். அதற்கு அடுத்தநாள் (04.01.2018) சபாபதி தன் மகனை தொடர்பு கொண்ட போது, பரந்தாமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அன்று (04.01.2018) பகல் 1 மணியளவில், தனது மகனின் கைப்பேசியிலிருந்து அழைத்து இந்தியில் பேசிய ஒருவர், தான் புனே காவல் துறையிலிருந்து பேசுவதாகவும், தனது மகன் பரந்தாமன் அங்குள்ள ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 05.01.2018 அன்று, இறையூரில் பரந்தாமனின் உறவினர்களும், பொது மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அதில் பங்கேற்றனர்.

தொடர்வண்டியிலோ, பேருந்திலோ புனேவுக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், ஒரே இரவில் பரந்தாமன் புனேவுக்குச் சென்றது எப்படி? காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் திடீரென புனே சென்றது ஏன்? பரந்தாமன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு எடுத்தப் புகைப்படங்களில் அவரது கால் தரையில் உள்ளது எப்படி? என அடுக்கடுக்காகப் பல வினாக்கள் எழுந்துள்ளன.

இவ்வினாக்களை தெளிவுபடுத்த, இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த பரந்தாமன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பரந்தாமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அச்சாலை மறியல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று (07.01.2018) மாலை, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இன்று (07.01.2019) காலை, அரசியல் இயக்கத்தினரும், பொது மக்களும் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை நெய்வேலியிலிருந்து வந்த அதிவிரைவுக் காவல்துறையினர் கடுமையாக அடித்துக் கைது செய்துள்ளனர்.

இளைஞர் பரந்தாமன் கொலையில் உள்ள மர்மங்களைக் களைந்து, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடித்து விரட்ட நினைப்பது எவ்வகையில் ஞாயம்? எனவே, தமிழ்நாடு அரசு இவ்வழக்கு குறித்த முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! இளைஞர் பரந்தாமன் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, அவரது பெற்றோர் விரும்பும் மருத்துவக் குழு முன்னிலையில் முழுமையாக உடல் கூராய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!