Perambalur: Thousands of people blocked the road for about 8 hours demanding action against those encroaching on the road in Poolampadi!

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசடிக்காடு என்னும் பகுதி பச்சமலை அடிவாரப்பகுதி உள்ளது. விவசாயிகள் அவரவரது நிலங்களில் வீடு கட்டி சுமார் 140 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். சாகுபடி செய்த வேளாண்பொருட்களை வாகனங்களில் அனுப்புவதற்கும், கறந்த பாலை பண்ணைக்கு எடுத்துச் செல்வதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், நோயாளிகளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வதற்கும் போதுமான சாலை வசதி இல்லாமல் காட்டுக்கொட்டகை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சுமார் 70 ஆண்டுகளாக அன்றாடம் சந்தித்து வந்த நிலையில், சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் அவர்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்து ஆளாளுக்கு இடம் விட்டு கொடுத்து பாதையை ஒதுக்கி பயணித்தும் வந்தனர். மலைகாலங்களில் இந்த பாதை சேரும் சகதியுமாய், பயணிக்க தகுதியற்றதாக இருந்தது. இதனை அடுத்து சுமார் 90 விவசாயிகள் அவர்களது நிலத்தினுள் சாலை அமைக்க தேவையான இடத்தை அரசுக்கு பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஒருசிலர் பூலாம்பாடி பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக பேரூர் தலைவருமூன செல்வலட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் ஒருவர் மட்டும் சாலை அமைப்பதை தடுக்கும் நோக்கில் சாலை அமைக்க இடம் தருவதாக ஒத்துக்கொண்டவர், இடத்தை அரசுக்கு எழுதி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும், பொதுமக்கள் செல்லும் பாதையை உழுது பயிரிட்டுள்ளார். இதைக் தட்டிக் கேட்ட மக்களை தாக்கியதாகவும், பொய்யாக வழக்குகளை பொதுமக்கள் மீது புகாரையும் நிலத்தின் உரிமையாளர் மலர்விழி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டு பொங்கி எழுந்த மக்கள் இன்று காலை பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், மலர்விழி கொடுத்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி பூலாம்பாடி அரசடிக்காடு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விவசாயிகளின் நலன் சார்ந்து தார்ச்சாலை அமைக்க முடிவெடுத்த நிலையில், ஒருவர் மட்டும், உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்களின் தூண்டுதலின் பேரில் முரண்பட்டு நிற்பதாக கூறும் பிற விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும் என வலியுறுத்தி இன்று காலை பூலாம்பாடி மேற்கு மந்தைவெளியில் வந்த பேருந்துகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் டிராக்டர்களை பெரியம்மாபாளையம், வீரகனூர், அரும்பாவூர், வேப்படி பாலக்காடு சாலைகளின் குறுக்கே நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆத்தூர், சேலம், பெரம்பலூர், அரும்பாவூர் மார்க்கத்தில் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும், பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி பழனிசாமி, மற்றும் பெரம்பலூர் ஆர்.டி.ஓ கோகுல் ஆகியோர் பொதுமக்களை சந்தித்தனர். பின்னர், பிரச்சனைக்குரிய இடத்திற்கு நேரில் சென்றனர். பொதுமக்கள் பாதையை சேதப்படுத்தியதற்காகவும், பொதுமக்களை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதற்கும், நிலத்தின் உரிமையாளர் மலர்விழியை கைது செய்தனர். மேலும். பாதையை உழுத டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களிடம், சமாதன பேச்சு நடத்திய அதிகாரிகள் நாளை பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் இது குறித்த பேச்சு நடத்த வருமாறு தெரிவித்தனர். மேலும், மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி இப்பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

மக்களின் இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!